புதுவண்ணாரப்பேட்டையில் மாதா சிலை உடைப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
புதுவண்ணாரப்பேட்டையில் மாதா சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பூர்,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நற்கருணை ஆலயம் செல்லும் வழியில் தெருமுனையில் மாதா சிலை உள்ளது. இந்த மாதா சிலையை அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர்.
நேற்றுமுன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் இந்த மாதா சிலையை அடித்து உடைத்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், இதுகுறித்து. புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் மாதா சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், சிலையை உடைத்த மர்மநபர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் அந்த பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் உள்பட பொதுமக்கள் நேற்று காலை அந்த பகுதியில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், சிலையை உடைத்த மர்மநபர்களை விரைவில் கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story