திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை கலெக்டர் பொன்னையா, போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் போட்டு கொண்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரியில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசியை மாவட்ட கலெக்டர் பொன்னையா போட்டுக்கொண்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு உத்தரவின்படி கடந்த கடந்த மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று முதல் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டது. எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருப்பதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து எல்லா பகுதிகளிலும் உள்ள முன்கள பணியாளர்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
33 ஆயிரத்து 752 பேர் முன்பதிவு
ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு தடுப்பூசி மையம் ஆரம்பிக்கப்பட உள்ளது. ஏற்கனவே முக்கியமான 6 மையங்கள் உள்ளது. தற்போது 14 ஒன்றியங்களிலும் ஒரு தடுப்பூசி மையம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 10 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 752 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த நபர்களுக்கு கால அட்டவணைப்படி செல்போனில் தகவல் சென்றடையும். அதன்படி குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் சென்று தடுப்பூசி போட்டு் கொள்ளலாம். இதுவரை 3 ஆயிரத்து 500 முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கும் தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அடுத்த கட்டமாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கலெக்டரை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி மற்றும் அரசு அலுவலர்கள், வாகன டிரைவர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story