மத்திய அரசின் பட்ஜெட் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும்-ஜிகேவாசன்


மத்திய அரசின் பட்ஜெட் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும்-ஜிகேவாசன்
x
தினத்தந்தி 4 Feb 2021 12:15 PM IST (Updated: 4 Feb 2021 12:15 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் பட்ஜெட் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என கடலூரில் ஜிகேவாசன் தெரிவித்தார்.

கடலூர்,

கடலூருக்கு நேற்று மாலை வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் தமிழக தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணியின் வெற்றிக்கு மேலும் வழிவகுக்கும். சட்டமன்றத்தில் எதிர்கட்சியினரின் வெளிநடப்பு வழக்கமானது. இது தமிழக மக்களுக்கு பழகி போனது. காரணம் எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளை செய்வது கிடையாது.

தற்போது எம்.ஜி.ஆர். பெயரை தேர்தல் பிரசாரத்துக்காக தி.மு.க. பேச தொடங்கி இருப்பது, அந்த கட்சியின் பலவீனத்தை காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவது, அவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கிற துரோகம்.

விவசாயிகளுக்கு ஆறுதல்

நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்களில் பங்கேற்று, தங்களது தொகுதி வளர்ச்சி மற்றும் நாட்டு வளர்ச்சிக்குண்டான உகந்த பணிகளையே மக்கள், எதிர்க்கட்சியிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். ஜனவரி மாதத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு ஆறுதல் தருகிறது.
மேலும் நாளை (அதாவது இன்று) முதல் தொடர்ந்து 3 நாட்கள் மத்திய குழு தமிழகம் வந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று பயிர்களை ஆய்வு செய்ய இருக்கிறார்கள். விவசாயிகள் நலன்கருதி மத்திய குழு ஆய்வை முழுமையாக செய்ய வேண்டும்.

தனி சின்னம்

நெய்வேலி என்.எல்.சி.யில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களில், நேர்முக தேர்வுக்கு அழைத்தவர்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதனால் அந்த பட்டியல் சந்தேகத்துக்கு இடமளிக்கிறது. மேலும் என்.எல்.சி.யில் எந்த பணிக்கு ஆட்கள் எடுத்தாலும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. தனி சின்னத்தில் தான் போட்டியிடும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Next Story