2-வது நாளாக சாலை மறியல்; அரசு ஊழியர்கள் 94 பேர் கைது
தேனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 94 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி:
அரசு ஊழியர்கள் சாலை மறியல்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர் சங்கத்தினர் அறிவித்தனர்.
அதன்படி, நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனியில் ஆர்ப்பாட்டம் செய்து மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர்கள் 98 பேரை போலீசார் கைது செய்தனர்.
2-வது நாளாக நேற்றும் தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதற்கு மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
94 பேர் கைது
மறியல் செய்த போது அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்சுக்கு வழிவிடுவதற்காக சிலர் சாலையில் இருந்து எழுந்தனர்.
சிலர் சாலையில் அமர்ந்து இருந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் செல்வதற்கு போலீசார் வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.
அப்போது ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் இருந்ததை கண்டித்து அரசு ஊழியர்களிடம் போலீசார் சிலர் வாக்குவாதம் செய்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 78 பெண்கள் உள்பட 94 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story