மீனவர்களின் வலைகளில் சிக்கிய 20 ஆமைகள் கடலில் விடப்பட்டன
தனுஷ்கோடி கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலைகளில் ஒரே நாளில் 20 ஆமைகள் உயிருடன் சிக்கின.
ராமேசுவரம்,
தனுஷ்கோடி கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலைகளில் ஒரே நாளில் 20 ஆமைகள் உயிருடன் சிக்கின.
தனுஷ்கோடி
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் ஏராளமான அரியவகை ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் தனுஷ்கோடி தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் எம்.ஆர். சத்திரம் கடற்கரையில் இருந்து அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் பல பிரிவுகளாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டனர்.
உயிருடன் ஆமைகள்
இவ்வாறு கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலைகளில் நேற்று ஒரே நாளில் பலவகை மீன்களுடன் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆமைகள் உயிருடன் வலைகளில் சிக்கி இருந்தன.
இவ்வாறு வலைகளில் மீன்களுடன் உயிருடன் சிக்கியிருந்த அனைத்து ஆமைகளையும் மீனவர்கள் மிகவும் பாதுகாப்பாக வலையிலிருந்து எடுத்து மீண்டும் கடற்கரையில் விடவே ஆமைகள் ஒவ்வொன்றும் மெதுவாக ஊர்ந்தபடி கடலுக்குள் சென்றன.
உயிருடன் கடற்கரை மணலில் ஊர்ந்தபடி அழகாக கடலுக்குள் சென்ற ஆமைகளை நேற்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த பார்த்து ரசித்ததுடன் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து பதிவு செய்து கொண்டனர்.
250 ஆமைகள்
இதுபற்றி தனுஷ்கோடி கடலில் மீன் பிடிக்கும் மீனவர் ஒருவர் கூறும்போது, தனுஷ்கோடி தென் கடல் பகுதியில் கரைவலை மீன்பிடிப்பு சீசன் தொடங்கிய இந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 250-க்கும் மேற்பட்ட ஆமைகள் உயிருடன் கடலில் விடப்பட்டுள்ளதாகவும், வலைகளில் மீன்களை விட இந்த ஆண்டு ஆமைகள் அதிகஅளவில் சிக்குவதாகவும் தெரிவித்தார்.
இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, மாவட்டத்திலேயே தனுஷ்கோடி கடல் பகுதியில் அதிக அளவிலான ஆமைகள் உள்ளன. தற்போது ஆமைகள் முட்டையிடும் சீசனாக உள்ளதால் கடற்கரை மணல் பரப்பில் ஏதேனும் ஆமைகள் வந்து சென்றதற்கான தடயங்கள் இருந்தாலோ மீனவர்கள் இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆமைகளை அழிவில் இருந்து பாதுகாக்க மீனவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். கரைவலை மீன்பிடிப்பில் உயிருடன் சிக்கும் ஆமைகளை கடலில் விட்டு வரும் மீனவர்களை பாராட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story