தூத்துக்குடி :கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ்


தூத்துக்குடி :கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட  கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 4 Feb 2021 6:55 PM IST (Updated: 4 Feb 2021 6:55 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் செந்தில்ராஜ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் செந்தில்ராஜ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி

தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் வருவாய்த்துறை மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதைத் தொடர்ந்து  மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

அப்போது, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி, மருத்துவ கண்காணிப்பாளர் பாவலன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் குமரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

15 மையங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் 5 மையங்கள் மூலம் போடப்பட்டது. தற்போது மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனுமதிக்கப்பட்ட 15 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகிறது. மேலும் 2 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, போலீஸ் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பல்வேறு முன் களபணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைவதற்கு கொரோனா தடுப்பூசி போடுவதே முக்கிய தீர்வாகும்.

3 ஆயிரம் பேருக்கு...

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைனில் புகைப்படம் எடுத்து பதிவு செய்யப்படுகிறது. தடுப்பூசி போட்ட பின்பு சுகாதார துறையின் மூலம் விவரங்கள் அடங்கிய அட்டை வழங்கப்படுகிறது. அதில் பெயர், எந்த விதமான கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோம். அடுத்ததாக 28 நாட்களுக்கு பின்பு எந்த தேதியில் அடுத்த டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விவரம் அந்த அட்டையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை 3 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மட்டும் இதுவரை 628 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. முன்கள பணியாளர்களுக்கு தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி போடப்பட்ட பின்பு அரை மணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு செல்ல வேண்டும்.

பாதிப்பு இல்லை

தூத்துக்குடி மாவட்டத்துக்கு இதுவரை 25,000 தடுப்பூசி வரப்பெற்று உள்ளது. கூடுதலாக வரவைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விரைவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போட அனுமதி வரப்பெற்ற உடன் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அஜாக்கிரதையாக இல்லாமல் முககவசம், சமூக இடைவெளி தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட நான் உள்பட அனைவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. அனைவரும் நலமாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story