குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து 16 வாலிபர்களிடம் கொள்ளையடித்த பட்டதாரி பெண் கைது
சமூகவலைத்தளத்தில் பழகி குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து 16 வாலிபர்களிடம் நகை, பணம், செல்போன்களை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
புனே,
புனே அருகே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். இந்த புகாரில் தங்களுடன் சமூகவலைத்தளத்தில் பழகிய பெண் ஒருவர் ஏமாற்றி நகை, பணம், செல்போனை கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்து இருந்தனர்.
இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணின் செல்போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரின் இருப்பிடம் தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் 27 வயதுயுடைய பெண்ணை பிடித்து கைது செய்தனர். இவரிடம் இருந்து ரூ.15 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பிடிபட்ட பெண் பட்டதாரி என்பதும், தனியார் தொலைபேசி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவரது தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து தாய்க்கு புற்றுநோய் ஏற்பட்டதன் விளைவாக மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டது.
இதனால் அப்பெண் சமூகவலைத்தளத்தில் போலியான பெயரில் பதிவு செய்து அதில் வரும் இளைஞர்களை குறிவைத்து ஆபாசமாக அழைப்பு விடுத்து உள்ளார்.
இதனை நம்பி வரும் வாலிபர்களை அங்குள்ள ஓட்டலுக்கு அழைத்து செல்வார். பின்னர் உடன் வந்த வாலிபர் கவனிக்காத சமயத்தில் தான் கொண்டு வந்திருந்த தூக்க மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து உள்ளார். இதனை பருகிய வாலிபர்கள் மயங்கியவுடன் அவர்களிடம் இருந்து நகை, பணம், செல்போனை திருடி கொண்டு தப்பி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தாய்க்கு வாங்கும் தூக்க மாத்திரைகளை வைத்து இந்த கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவ்வாறு 16 வாலிபர்களிடம் அப்பெண் கொள்ளையடித்து இருப்பதும் தெரியவந்தது.
இந்த தகவலை பிம்பிரி சிஞ்ச்வாட் போலீஸ் கமிஷனர் கிருஷ்ணா பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story