மணல் கொள்ளைக்காக தடுப்பணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட்ட கும்பல்
பேரணாம்பட்டு அருகே மணல் கொள்ளைக்காக தடுப்பணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றிய கும்பல் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே மணல் கொள்ளைக்காக தடுப்பணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றிய கும்பல்
மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தடுப்பணை
பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லியில் தடுப்பணை உள்ளது. பேரணாம்பட்டு சுற்றுப்புற கிராமங்களுக்கு
நீராதாரமாக விளங்கி வருவதோடு மதினாப்பல்லி, பாலூர், கொத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார்
1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பேரணாம்பட்டு பகுதியில் பெய்த மழையின் காரணமாக தடுப்பணையில் சுமார் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர்
தேங்கியிருந்தது. பெரியதாமல்செருவு மதினாப்பல்லி மலட்டாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளையடிக்கப்பட்டு
வருகிறது.
தண்ணீர் வெளியேற்றம்
இந்த நிலையில் தடுப்பணையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியிருப்பதால் மணல் திருடமுடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியதாமல் செருவு பகுதியை சேர்ந்த சிலர் தடுப்பணைக்குள் அத்துமீறி நுழைந்து
அங்கிருந்த 3 இரும்பு ஷட்டர்களை திருப்பி வெல்டிங் செய்து,
மணல் கடத்தலுக்கு வசதியாக தடுப்பணையிலிருந்து தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.
இன்று காலையில் தடுப்பணையில் தண்ணீர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் இது குறித்து
பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். குடியாத்தம் பொதுப்பணித் துறை
செயற்பொறியாளர் தமிழ்ச் செல்வன் மற்றும் வருவாயத் துறை அதிகாரிகள் விரைந்து சென்று
பார்வையிட்டனர்.
போலீசில் புகார்
அப்போது தடுப்பணையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்,
பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
தடுப்பணைக்குள் அத்துமீறி நுழைந்து தடுப்பணையை சேதப்படுத்திய மணல் கடத்தல் கும்பல் மீது
நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் கொடுத்த
புகாரின் பேரில், பேரணாம்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் சிங்காரம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story