ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் ஜப்தி


ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் ஜப்தி
x
தினத்தந்தி 4 Feb 2021 10:27 PM IST (Updated: 4 Feb 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காததால் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூர்

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காததால் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன. இதனால் ஊழியர்கள் நின்று கொண்டு பணியில் செய்தனர்.

இழப்பீடு கோரி வழக்கு

சிவகாசியை சேர்ந்தவர் அன்ஸ்ராஜ் சந்திரன். இவருக்கு சொந்தமான நிலம் கடந்த 1995-ம் ஆண்டு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கேட்டும் கிடைக்காததால் அன்ஸ்ராஜ் சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இழப்பீட்டு தொகையாக 10 லட்சத்து 53 ஆயிரத்து 432 வழங்க சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ரூ.5 லட்சம் மட்டும் இழப்பீடு கொடுக்கப்பட்ட நிலையில் எஞ்சிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட வில்லை.

உத்தரவு

இதைத் தொடர்ந்து கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சார்பு நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் இன்று தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். இதைத் தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் பயன்படுத்தும் நாற்காலிகள் மற்றும் மேஜைகள், தாசில்தார் பயன்படுத்தும் நாற்காலி என அனைத்தையும் ஜப்தி செய்து லாரி ஒன்றில் ஏற்றி கொண்டு சென்றனர்.

மேஜை, நாற்காலி இல்லாததால் தாலுகா அலுவலக ஊழியர்கள் திகைத்து நின்றனர். நாற்காலி இல்லாமல் ஊழியர்கள் நின்று கொண்டு தங்களது பணியை தொடர்ந்தனர்.

தாசில்தார் மேஜை

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பயன்படுத்தும் நாற்காலி ஜப்தி செய்யப்பட்டு விட்டதால் மேஜை மட்டும் உள்ளது. தாலுகா அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story