சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம்


சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 4 Feb 2021 11:15 PM IST (Updated: 4 Feb 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நெல்லிக்குப்பம். 

கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்கு இரணியனை வதம் செய்த கோலத்தில், 16 கைகளுடன் நரசிம்ம பெருமாள் உக்கிர நிலையில் மேற்கு திசை நோக்கி காட்சி அளிப்பது தனி சிறப்பாகும். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். 

இக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1 கோடியும் தனியார் பங்களிப்போடு திருப்பணிகள் நடந்து முடிந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

கும்பாபிஷேகம்

இதனை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் பூஜையுடன் விழா தொடங்கியது. இதையடுத்து யாகசாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கும்பாராதனம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. 
விழாவின் முக்கிய நாளான நேற்று காலையில் யாத்ராதனம், கும்பாரோகணம்‌ நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. 

திருமஞ்சனம்

அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்கிற பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. 

இவ்விழாவில் ரெட்டிச்சாவடியை சுற்றியுள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Next Story