விமான ஓடுதளத்தை ராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
உளுந்தூர்பேட்டை அருகே விமான ஓடுதளத்தை ராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் மன்னார்குடி பகுதியில் இரண்டாம் உலகப்போரில் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளம் உள்ளது. இந்த விமான ஓடுதளம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. உளுந்தூர்பேட்டையில் பெருமைக்குரிய சின்னமாக கருதப்படும் இந்த விமான ஓடுதளம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முக்கிய விமானப்படை தளமாக விளங்கியது. சுதந்திரத்திற்கு பிறகு முக்கிய தலைவர்கள் வந்து செல்வதற்காக மட்டுமே இந்த விமான ஓடுதளம் பயன்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பால் இந்த ஓடுதளம் தற்போது சுருங்கி போய் உள்ளது. இதையடுத்து இந்த விமான ஓடுதளத்தை மீட்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய ராணுவ பாதுகாப்பு நிலப்பிரிவு அதிகாரிகள் அஸ்வின் குமார், தினேஷ்குமார் ஆகியோர் தலைமையில் தாசில்தார் காதர் அலி மற்றும் அதிகாரிகள் நவீன ராணுவ அளவீடு கருவிகளைக் கொண்டு நகர் மன்னார்குடியில் உள்ள விமான ஓடுதளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் விமான ஓடுதளத்தில் பாதை மற்றும் அதன் எல்லைகள் அளவீடு செய்யப்பட்டன. இந்த விமான ஓடுதளத்தை விரைவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வேலி அமைத்து பாதுகாப்பு படை பயிற்சிக்கு பயன்படுத்த முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story