சேலத்தில் 3-வது நாளாக அரசு ஊழியர்கள் போராட்டம்: மறியலில் ஈடுபட்ட 145 பேர் கைது
சேலத்தில் 3-வது நாளாக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 145 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு அரசு ஊழியர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 3-வது நாளாக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவுத்துறை மாவட்ட தலைவர் தனசேகரன், சாலை பணியாளர்கள் சங்க தலைவர் சிங்கராயன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 145 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.
Related Tags :
Next Story