நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: கேரள இடைத்தரகருக்கு காவல் நீட்டிப்பு
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கேரள இடைத்தரகருக்கு காவல் நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
தேனி,
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவரான கேரள மாநிலத்தை சேர்ந்த ரஷீத் என்பவர் முக்கிய இடைத்தரகர் ஆவார்.
அவரை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த மாதம் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்து இந்த வழக்கில் அவரை கைது செய்தனர்.
மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோர்ட்டு காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவும் கடந்த மாதம் தேனி கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது.
இதனால், நேற்று அவர் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வருகிற 18-ந்தேதி வரை காவல் நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதற்கிடையே ரஷீத்துக்கு ஜாமீன் கேட்டு தேனி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதும் நேற்று விசாரணை நடந்தது. விசாரணையை தொடர்ந்து ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
இதையடுத்து மீண்டும் அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story