குறுக்குச்சாலை அமைக்க வலியுறுத்தி மறியலுக்கு திரண்டு வந்த பொதுமக்கள்
குறுக்குச்சாலை அமைக்க வலியுறுத்தி சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய திரண்டு வந்தனர்.
சேலம்,
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து கொண்டலாம்பட்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். மேலும் இந்த பகுதியில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரின் உயரம் குறைந்த அளவு உள்ளது.
இதை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தடுப்புச்சுவரை தாண்டி எதிர் முனையில் உள்ள சாலைக்கு செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதையொட்டி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தடுப்பு சுவரை உயர்த்தும் போது வாகன ஓட்டிகள் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே கரட்டூர் பகுதியில் குறுக்குச்சாலை அமைக்க வலியுறுத்தி வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நேற்று சீலநாயக்கன்பட்டி-கொண்டலாம்பட்டி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட முயற்சி செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையொட்டி சாலை மறியல் முயற்சியை பொதுமக்கள் கைவிட்டனர்.
நடவடிக்கை இல்லை
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கரட்டூர் பகுதியை சுற்றி பாரதிநகர், மணியனூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் இறந்தால் அவர்களின் உடலை 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றித்தான் சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்கிறோம். எனவே இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் இடையில் குறுக்குச்சாலை அமைக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்து உள்ளோம். ஆனால் நடவடிக்கை இல்லை.
தற்போது அதிகாரிகள் 4 மீட்டர் அளவுக்கு குறுக்குச்சாலை அமைப்பதாக கூறி உள்ளனர். இந்த அளவில் குறுக்குச்சாலை அமைத்தால் கார் உள்ளிட்ட வாகனங்கள் எளிதில் திரும்ப முடியாது. எனவே 5 மீட்டர் அளவுக்கு குறுக்குச்சாலை அமைக்க வேண்டும். இந்த நிலையில் குறுக்குச்சாலை விரைவில் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story