சர்வீஸ் சாலை அமைப்பதற்கு பதிலாக பறக்கும் சாலை திட்டத்தை கொண்டுவர வேண்டும்; ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


சர்வீஸ் சாலை அமைப்பதற்கு பதிலாக பறக்கும் சாலை திட்டத்தை கொண்டுவர வேண்டும்; ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 5 Feb 2021 11:09 AM IST (Updated: 5 Feb 2021 11:11 AM IST)
t-max-icont-min-icon

சர்வீஸ் சாலை அமைப்பதற்கு பதிலாக பறக்கும் சாலை திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவெறும்பூர்,

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சாலை விரிவாக்க பணிகளால் பாதிக்கப்படுவோர் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று காட்டூரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ரகுநாதன், பொருளாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

இங்கு சர்வீஸ் சாலை அமைப்பதற்கு பதிலாக மாற்று வழி என்ன என்பதை யோசிக்க வேண்டும். இந்த சர்வீஸ் சாலையில் இடிக்கப்படும் கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்களால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து கருத்து அரசு கூட கேட்கவில்லை. 
உயிரே போனாலும் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு இடிக்க விடமாட்டேன் என்றும் கூறியதோடு பறக்கும் சாலை திட்டத்தை கொண்டு வர வேண்டும். வணிகர்களிடம் ஒரு லட்சம் ஓட்டுகள் உள்ளன. அதனால் திருவெறும்பூர் தொகுதிகள் யார் போட்டியிட்டாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் வணிகர்களின் ஆதரவு இல்லாமல் ஜெயிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தீர்மானம்
கூட்டத்தில், திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 14.5 கிலோமீட்டருக்கு சர்வீஸ் சாலை அமைப்பதற்காக கடைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழில் கூடங்கள், மருத்துவ மனைகள், வழிபாட்டுத்தலங்கள், கட்டிடங்களை இடிப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு கட்டிடங்கள் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சேலம், பெங்களூரு நகரங்களில் தற்போது நடைமுறையில் உள்ள உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை பறக்கும் பாலம் திட்டத்தை போன்று பழைய பால்பண்ணை முதல் தூவாக்குடி வரை அமைக்க வேண்டும். அரைவட்ட சாலை பணிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இது சம்பந்தமாக திருச்சி கலெக்டரை 9-ந்தேதி சந்தித்து மனு கொடுப்பதோடு தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை சந்தித்து மனு கொடுப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story