வாய்ப்புகள் வரும் போது தவற விட கூடாது, திருவண்ணாமலை கலெக்டர்
வாய்ப்புகள் வரும்போது தவறவிட கூடாது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை
வாய்ப்புகள் வரும்போது தவறவிட கூடாது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுரை வழங்கினார்.
கருத்தரங்கு
கீழ்பென்னாத்தூர் தாலுகா வேட்டவலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இன்று நடந்தது.
நிகழ்ச்சியை கலெக்டர் சந்தீப்நந்தூரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து வேலை நாடுநர்களுக்கான கையேட்டை வெளியிட்டு கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கை லட்சியம் நல்ல வேலை கிடைப்பதாகும். பல்ேவறு தொழில் வாய்ப்புகள் நாட்டில் உள்ளது. தேசிய, மாநில அளவில் பல்வேறு வேலைகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இது தவிர வங்கி பணிகள், பொதுத்துறை மற்றும் தனியார்துறை பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு நாட்டில் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருப்பது குறித்து தெரியாமல் உள்ளது.
தனி இணையதளம்
உலகளவில் அனைத்து துறைகளிலும் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளது. அரசு மூலம் உங்கள் திறன் மேம்படுத்துவதற்கு www.tnskill.tn.gov.in தனி இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதில் நீங்கள் உங்கள் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் அரசு சார்பாக பல்வேறு பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த வயதில் தான் நீங்கள் உங்களை நன்றாக தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
உங்கள் திறன், பலம் அடையாளம் கண்டு அதில் முயற்சி செய்யுங்கள். எங்கு வேலைவாய்ப்புகள் இருக்கிறது என தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு உங்கள் திறன், ஆளுமை, தொடர்பு, அறிவு ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
அரசு மூலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலமாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தவற விடக்கூடாது
அரசு வேலைவாய்ப்புத் துறை மூலமாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி, திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இங்கு கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விரவங்கள் இடம் பெற்றுள்ளது. வாய்ப்புகள் வரும் போது தவற விட கூடாது. அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி, தாட்கோ மாவட்ட மேலாளர் ஏழுமலை, முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குனர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story