பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை - நண்பர்கள் 2 பேர் கைது
பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்துக்கொன்றுவிட்டு உடலை தீ வைத்து எரித்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள மங்கள் ஏரி பூங்கா அருகே வாலிபர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நேற்று அதிகாலை நொளம்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அங்கு வாலிபர் ஒருவர் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், அங்கு குடிபோதையில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு(வயது 33) மற்றும் பாஸ்கர்(44) என்பதும், கொலை செய்யப்பட்ட வாலிபர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சிவகுமார்(27) என்பதும் தெரிய வந்தது.
நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஒன்றாக சேர்ந்து அந்த பகுதியில் குப்பைகளை பொறுக்கி அதில் கிடைக்கும் பணத்தை பிரித்து எடுத்துக்கொண்டு தினமும் குடித்துவிட்டு சாலையோரம் தங்கி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குப்பைகள் பொறுக்கி விற்றதில் கிடைத்த பணத்தை பங்கு போடுவதில் குடிபோதையில் இருந்த நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாஸ்கர், விஷ்ணு இருவரும் சேர்ந்து சிவகுமாரை அடித்துக்கொலை செய்துவிட்டு, அவர் உடலில் அருகில் இருந்த குப்பைகளை போட்டு தீ வைத்து எரித்தது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து விஷ்ணு, பாஸ்கர் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story