கலப்பட மருத்துவ முறையை ரத்து செய்யக்கோரி நாகர்கோவிலில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்
கலப்பட மருத்துவ முறையை ரத்து செய்யக்கோரி நாகர்கோவிலில் டாக்டர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
தொடர் உண்ணாவிரதம்
மத்திய அரசு மிக்சோபதி (கலப்பட) மருத்துவ முறையை அறிவித்துள்ளது. அதாவது அலோபதி டாக்டர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சைகளை இனிமேல் ஆயுர்வேத டாக்டர்களும் செய்யலாம் என்று அறிவித்திருந்தது. இதற்கு அலோபதி டாக்டர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக நாடு தழுவிய அளவில் அனைத்து மருத்துவ சங்க கூட்டமைப்பு சார்பில் 2 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று தொடங்கியது. இதேபோல் குமரி மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்க கிளை மற்றும் அரசு டாக்டர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சங்க கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
டாக்டர்கள்
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு அனைத்து மருத்துவ சங்க கூட்டமைப்பு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் தாணப்பன், அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இந்திய மருத்துவ சங்க நாகர்கோவில் கிளை தலைவர் சிவகுமார், கன்னியாகுமரி கிளை தலைவர் எஸ்.ஆர்.கண்ணன், ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி இந்திய மருத்துவ சங்க கிளைத் தலைவர் பிரவீன், மார்த்தாண்டம் கிளை தலைவர் எட்வின் கின்ஸ், செயலாளர் பிரதீப், அரசு டாக்டர்கள் சங்க தலைவர் பிரின்ஸ் பயஸ், ஜனநாயக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் சுரேஷ்பாலன், பல் மருத்துவர்கள் சங்க பொருளாளர் பெரில், டாக்டர்கள் அருண், திரவியம் மோகன், செல்வப்பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2-வது நாள் போராட்டம்
போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை வரை நடந்தது. 2-வது நாளாக இன்றும் (சனிக்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக அனைத்து மருத்துவ சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார் கூறியதாவது:-
தற்போது தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக பள்ளிக்கல்வியிலும், மருத்துவ படிப்பிலும் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த தேசிய கல்வி கொள்கையின் மூலமாக ஆயுஷ் மருத்துவமுறையை பயின்ற மருத்துவ மாணவர்கள் அவர்களுடைய விருப்பம் போல் அலோபதி மருத்துவ முறையை பயின்று கொள்ளலாம் என்ற ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.
கலப்படம்
இந்த அறிவிப்பு மருத்துவ துறையை கலப்படம் செய்வதற்கு ஒப்பாகும். இதன் மூலமாக அலோபதி மருத்துவர்கள் மட்டுமல்லாது ஆயுஷ் மருத்துவர்களும் பாதிக்கப்படுவார்கள். அலோபதி மருத்துவ முறையில் குறைந்தபட்சம் ஐந்தரை ஆண்டுகள் இளநிலை எம்.பி.பி.எஸ். படிப்பும், அதைச் சார்ந்த கட்டாய ஒரு வருட மருத்துவ மாணவர்கள் அறுவை சிகிச்சை பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர். அதற்கு பிறகு 3 வருட முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பயிற்சிக்கு பிறகே அறுவை சிகிச்சை செய்திட இயலும். இதற்கு மாறாக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் மூலமாக ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்காக எந்த ஒரு அடிப்படை பயிற்சியும், படிப்பும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இதனால் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்.
மருத்துவ முறையில் கலப்படம் செய்தால் அது மிகப்பெரிய குழப்பத்துக்கும், சீர்கேடுக்கும் வழிவகுக்கும். எனவே மக்கள் நலன் கருதி அரசு இந்த ஆணையை உடனடியாக ரத்து செய்து, திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story