முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Feb 2021 6:09 AM IST (Updated: 6 Feb 2021 6:12 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே  வடவாளம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஞானபிரகாசம். இவருடைய மனைவி அருள்சிறுமலர். இவர் வடவாளம் ஊராட்சியின் தற்போதைய தலைவராக உள்ளார். இந்த நிலையில் ஞானபிரகாசத்தை ஒரு கும்பல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை அறிந்த வடவாளம் கிராம மக்கள் ஞானபிரகாசத்தை தாக்கிய கும்பலை கைது செய்யக்கோரியும், மேலும் தாக்குதலுக்கு தூண்டுதலாக இருந்தவரை கைது செய்யக்கோரியும் புதுக்கோட்டை-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் இச்சடி என்ற இடத்தில் நேற்று காலையில் சாலை மறியல் ஈடுப்பட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமையிலான போலீசார் மற்றும்  தாசில்தார் முருகப்பன் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடவாளம் கிராமநிர்வாக அலுவலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story