கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல்அறுவடை பணி தொடக்கம்


கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல்அறுவடை பணி தொடக்கம்
x
தினத்தந்தி 6 Feb 2021 7:02 AM IST (Updated: 6 Feb 2021 7:04 AM IST)
t-max-icont-min-icon

முத்தூர், நத்தக்காடையூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முத்தூர்,

பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 24-ந்தேதி வரை கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. 
இந்த தண்ணீரை பயன்படுத்தி முத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், நத்தக்காடையூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் நடைபெற்றன.

இந்தநிலையில் இப்பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் அறுவடை பணிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. இதன்படி திருப்பூர், ஈரோடு, கரூர், தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த கூலி ஆட்கள் மூலம் நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மேலும் ஒரு சில இடங்களில் எந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இதனை தொடர்ந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் இப்பகுதிகளில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு கொண்டு சென்று விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

இதுபற்றி இப்பகுதி சம்பா நெல் சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:-

பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆண்டு கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதிகளில் சுமார் 13 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு முடிவு பெற்றுள்ளன. இதன்படி சம்பா நெல் பயிர் சாகுபடி செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு வயல் சமன் செய்தல், விதை நெல், நாற்று நடுதல், உர மேலாண்மை, பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை என பல்வேறு கட்டங்களுக்கு முதலீட்டு செலவாக ரூ.30 ஆயிரம் வரை ஆகி உள்ளது. 

மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில்ஒரு கிலோ நெல் ரூ.19.10 முதல், ரூ.19.50 வரை மட்டுமே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த தொகை நெல் சாகுபடி முதலீடு செலவுக்கு கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு நெல் கொள்முதல் மையங்களில் நெல்மணிகளை இன்னும் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய அரசு முன் வர வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story