‘அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது’ - டி.டி.வி.தினகரன்
அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலுக்கு நேற்று மதியம் திடீரென அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வந்தார். பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன்பிறகு டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக தேர்தல் களத்தில் சசிகலா போட்டியிடுவார். அ.ம.மு.க.வினர் மற்றும் தமிழக பொதுமக்கள் அனைவரும் சசிகலா வருகையை எதிர்நோக்கி உள்ளனர். தமிழகத்தில் பெரிய வேதியியல் மாற்றம் உருவாகும். அது எத்தனை பேரை எப்படி எல்லாம் பேசவைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
விவசாய கூட்டுறவு கடன் தள்ளுபடி, தேர்தலுக்கான நடவடிக்கை என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஜெயலலிதா ஆட்சி கண்டிப்பாக மலரும்.
சசிகலா காரில் அ.தி.மு.க. கொடி பயன்படுத்துவது குறித்து புகார் செய்துள்ளனர். இந்த செயலால் சிரிப்புதான் வருகிறது. கட்சி கொடியை பற்றி தீர்மானிப்பதில் தேர்தல் ஆணையம் தலையிடாது. அ.தி.மு.க. கொடியை சசிகலா, பொதுச் செயலாளராக பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது. அதற்கு டி.ஜி.பி.யிடம் அல்ல, முப்படை தளபதிகளிடம் மனு அளித்தாலும் தலையிட மாட்டார்கள். நீதிமன்றத்தில் முறையிட்டு நடவடிக்கை எடுக்க அவர்கள் முயற்சிக்கட்டும்.
தீயசக்தியான தி.மு.க.வை ஆட்சிக்கு வர விடமாட்டோம். அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டதே உண்மையான ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவதற்குதான். அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்கான ஜனநாயக ஆயுதம்தான் அ.ம.மு.க.. அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story