தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட கலெக்டர் தகவல்
தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருச்சி,
சிறந்த தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
பாரம்பரிய வீரிய ரகங்கள், ஒட்டு ரகங்கள், நவீன தொழில் நுட்பங்கள், சிறப்பான பயிர் பராமரிப்பு, நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சிநோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம், மழை நீ்ர் சேகரிப்பு, அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள், சிறப்பான சந்தை மேலாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
இதில்காய்கறிகள், பழங்கள், மூலிகை, வாசனை திரவிய பயிர்கள், மலைப்பயிர்கள், மலர்கள் சாகுபடி என பல பிரிவுகளில் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படுகிறது.
இதேபோல் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாளும் விவசாயிகளுக்கும், அங்கக சாகுபடியை பதிவு செய்து அதிக மகசூல் பெற்ற விவசாயிகளுக்கும் விருது வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.
ஒரு விவசாயி வட்டார அளவில் ஒரு விருதிற்கு மட்டுமே விண்ணப்பம் செய்யலாம். வட்டார அளவில் விருது பெற்ற விவசாயிகளிடம் இருந்து மாவட்ட விருதுக்கும், மாவட்ட அளவில் விருது பெற்ற விவசாயிகளிடம்இருந்து மாநில விருதுக்கும் குழு தேர்வு செய்யும். www.tnhorticullture.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்தி ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story