நெல்லையப்பர் கோவில் பாகன்கள்- ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
நெல்லையப்பர் கோவில் பாகன்கள்- ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நெல்லை:
தமிழக அரசு சார்பில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் யானைகளுக்கு ஆண்டுதோறும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோவில் பகுதியிலுள்ள பவானி ஆற்றங்கரை பகுதியில் யானைகள் நலவாழ்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் 48 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முகாம் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. முகாமுக்கு செல்லும் அனைத்து யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் முகாமுக்கு வரும் யானை பாகன்கள், ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே இந்து அறநிலையத்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில், முகாம்களுக்கு செல்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு யானைகள், பாகன்கள், ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி மீண்டும் காந்திமதி யானைக்கு நேற்று காலை பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா பரிசோதனைக்காக சளி, எச்சில் ஆகிய மாதிரிகளை தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சேகரித்தனர். நெல்லையப்பர் கோவில் பாகன்கள் ராமதாஸ், விஜயகுமார் ஆகியோருக்கு நெல்லை டவுன் பாட்டபத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் நலவாழ்வு முகாமுக்கு செல்லும் நெல்லையப்பர் கோவில் ஊழியர்கள் வேலுச்சாமி, வெங்கடேஷ், பாலகுரு ஆகியோருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமுக்கு இன்று (சனிக்கிழமை) காந்திமதி யானை புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story