ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 40 பேர் கைது.


ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 40 பேர் கைது.
x
தினத்தந்தி 6 Feb 2021 12:40 PM IST (Updated: 6 Feb 2021 12:40 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு
ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி கல்யாண ராமன், நபிகள் நாயகம் பற்றி இழிவாக பேசி உள்ளதால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காளை மாட்டு சிலை அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த சிலரை போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முன்னரே கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.
ஊர்வலம்
இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் காளை மாட்டு சிலைக்கு வராமல் ஈரோடு தீயணைப்பு நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஒன்று திரண்டனர். ஆனால் அங்கும் போலீசார் விரைந்து சென்றதால், அவர்கள் அங்கிருந்து காளை மாட்டு சிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் அரங்கம் முதல்வன் தலைமை தாங்கினார். பொறியாளர் அணி மாநில துணைச்செயலாளர் சாதிக், மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன்,  ஈரோடு சி.எஸ்.ஐ. தேவாலய ஆயர் லிவிங்ஸ்டன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி கோவை மண்டல செயலாளர் சுசி கலையரசன் கலந்து கொண்டு பேசினார்.
40 பேர் கைது
இதைத்தொடர்ந்து அவர்கள், பா.ஜ.க. நிர்வாகி கல்யாண ராமனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.
மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டு கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தால் காளை மாட்டு சிலை அருகில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story