2 குழந்தைகளுடன் பெண் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி
திருவோணம் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் பெண் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஒரத்தநாடு:
திருவோணம் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் பெண் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். .
குடும்ப தகராறு
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள நெய்வேலி தென்பாதி செட்டிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது36). லாரி டிரைவர். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதியைச்சேர்ந்த முருகேசன் மகள் அமலா(26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு பிரகதீஸ்வரன்(8), பிரித்திகா(6), பிரபாகரன்(3½) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் அமலாவின் மாமியார் விஜயராணிக்கும், அமலாவுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.
குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி
சம்பவத்தன்று அமலாவிற்கும், அவரது மாமியார் விஜயராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அமலா நேற்று முன்தினம் காலை தனது மகள் பிரித்திகா, மகன் பிரபாகரன் ஆகிய இருவரையும் வீட்டிற்குள் கயிற்றில் தூக்குப்போட்டு தொங்க விட்டுள்ளார். பிறகு குழந்தைகளுக்கு அருகிலேயே தானும் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அங்கு பார்த்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த அமலா மற்றும் அவரது குழந்தைகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அமலா குழந்தைகள் பிரித்திகா, பிரபாகரன் ஆகிய 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பிரபாகரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
தாய் உள்பட 3 பேர் மீது வழக்கு
இதுகுறித்து அமலாவின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்தி க்கோட்டை போலீசார் விஜயராணி, பழனிவேல், அமலா உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் மற்றும் மாமியார் ஆகியோருடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற விபரீத சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story