சித்தோடு அருகே தீ விபத்து; கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது- 2 குடிசைகள் எரிந்து நாசம்
சித்தோடு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததுடன், 2 குடிசைகள் எரிந்து நாசம் ஆனது.
பவானி
சித்தோடு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததுடன், 2 குடிசைகள் எரிந்து நாசம் ஆனது.
குடிசை வீடுகள்
சித்தோடு ராயபாளையம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவருைடய மனைவி லட்சுமி (வயது 60). இந்தநிலையில் நேற்று மதியம் கோபாலின் பேத்தி சவுமியா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது கியாஸ் கசிந்து குடிசையின் ஒரு பகுதியில் தீ பரவியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தீ மளமளவென பரவி அருகில் இருந்த செங்கோடனின் மனைவி லட்சுமி என்பவரின் குடிசை வீட்டிலும் தீப்பற்றியது.
தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் கோபால் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அருகில் இருந்த தங்கராஜ் மற்றும் சேகர் ஆகியோரின் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலிலும் தீப்பிடித்தது.
எரிந்து நாசம்
இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி காந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் கோபால், செங்கோடன் ஆகியோரின் வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.
Related Tags :
Next Story