தூத்துக்குடி, கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்; 90 பேர் கைது


தூத்துக்குடி, கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்; 90 பேர் கைது
x
தினத்தந்தி 6 Feb 2021 6:13 PM IST (Updated: 6 Feb 2021 6:13 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி, கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அதன்படி தூத்துக்குடியில் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு சாலைமறியல் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாநில செயலாளர் ரசல் முன்னிலை வகித்தார்.
22 பேர் கைது
போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன், சி.ஐ.டி.யு மாவட்டக்குழு உறுப்பினர்கள் அப்பாதுரை, குமாரவேல், ஜான் கென்னடி, டென்சிங், நாகராஜ், மாநகர செயலாளர் ராஜா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், மாணவர் சங்க தலைவர் ஸ்ரீநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி பஸ்நிலையம் முன்பு நடந்த சாலைமறியல் போராட்டத்துக்கு, விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் மணி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைத்தலைவர் மோகன்தாஸ், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தாலுகா செயலாளர் லெனின்குமார், பெருமாள்பட்டி பஞ்சாயத்து தலைவர் முரளிதரன், எட்டயபுரம் தாலுகா செயலாளர் ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விளாத்திகுளம் செயலாளர் பிச்சையா, சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் கிருஷ்ணவேணி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் தமிழரசன், சரவணமுத்து வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் உத்தரவின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 68 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
-------------------


Next Story