கல்லூரி மாணவர் பலி
குன்னூர் அருகே ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கேத்தி பிரகாசபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 25). இவர் கண் பரிசோதனை செய்வதற்காக மாதந்தோறும் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று வருவது வழக்கம்.
அதன்படி சுரேஷ் மைனலா பகுதியை சேர்ந்த செல்லையா மகன் ஸ்ரீநாத்(19) என்பவரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கோவைக்கு புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்டினார். ஊட்டி-குன்னூர் சாலையில் வெலிங்டன் பிளாக் பிரிட்ஜ் அருகே முன்னால் சென்ற பஸ் மற்றும் லாரியை வேகமாக முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஸ்ரீநாத், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுரேஷ் படுகாயம் அடைந்தார். ஸ்கூட்டரில் வந்த விஜயகுமாருக்கு(37) லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் சுரேஷ் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் உயிரிழந்த ஸ்ரீநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ஸ்ரீநாத், ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வன உயிரியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story