மனைவியை கொலை செய்த கணவன் கைது
ராமநாதபுரத்தில் மனைவியை குடும்ப தகராறில் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பாம்பூரணி பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது மகன் சபீக்ரகுமான் (வயது35). இவரின் மனைவி சாகிராபானு (34). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்களாகிறது. 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. சபீக்ரகுமான் வாடகை கார் ஓட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். சாகிராபானு ராமநாதபுரம் ஓம்சக்திநகர் பகுதியில் உள்ள தனது அக்கா சரீனாபானு வீட்டின் அருகில் வாடகைக்கு வீடு பிடித்து வாழ்ந்து வந்துள்ளார்.
அங்கு சபீக்ரகுமான் அடிக்கடி வந்து அடித்து கொடுமைப் படுத்தி வந்தாராம். இதனால் கணவருக்கு பயந்து சாகிராபானு அந்த வீட்டில் இருந்து வெளியில் சென்றுவிட்டாராம். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி மனைவியை தேடிபிடித்து சபீக்ரகுமான் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
மறுநாள் காலையில் வீட்டில் சாகிராபானு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று சாகிராபானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக சாகிராபானுவின் அக்காள் சரீனாபானு அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் சந்தேக மரணமாக வழக்குபதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் சபீக்ரகுமானை பிடித்து விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணையில் மனைவியை அடித்து கொலை செய்ததாக சபீக்ரகுமான் தெரிவித்ததாக கூறப்படுகிறது. குடும்ப தகராறில் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் குடும்பம் நடத்தலாம் என்று அழைத்து வந்ததாகவும் இரவில் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு அதில் ஆத்திரமடைந்து சபீக்ரகுமான் வீட்டில் கீழே கிடந்த குழாயால் மனைவியை தாக்கி கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட சந்தேக மரண வழக்கினை கொலை வழக்காக மாற்றம் செய்து சபீக் ரகுமானை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வீட்டில் இளம்பெண் மர்மமாக இறந்து கிடந்து சம்பவத்தில் கணவரே மனைவி என்றும்பாராமல் அடித்து கொலை செய்த சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story