கனமழையால் நெல், மிளகாய் பயிர் முற்றிலும் பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையால் நெல், மிளகாய் பயிர் முற்றிலும் சேதமடைந்தன. இதனை மத்திய அரசின் நிபுணர் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம்,
தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் சேதம டைந்தன. ராமநாதபுரம் மாவட்டத்தின் ஜனவரி மாத சராசரி மழைஅளவு 48.50 மி.மீ ஆகும். ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 248.74 மி.மீ மழைஅளவு பதிவாகி உள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் உரிய நிவாரணம் வழங்க ஏதுவாக ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக கிராமங்களில் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் விரிவான கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும், 10 ஆயிரம் ஏக்கர் சிறுதானிய பயிர்களும், 7 ஆயிரத்து 500 ஏக்கர் பயிறு வகைகளும், 3 ஆயிரத்து 250 ஏக்கர் எண்ணெய் வித்து பயிர்களும் என மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பல்வேறு பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், மாவட்டத்தில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்திட மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 4 பேர் கொண்ட மத்திய ஆய்வு குழு வருகை தந்தனர்.
இந்தகுழுவில் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் அசுடோஷ் அக்னிஹோத்ரி, மத்திய வேளாண்மை துறை அமைச்சக இயக்குனர் டாக்டர் மனோகரன், மத்திய நிதித்துறை துணை இயக்குனர் மகேஷ் குமார், மத்திய ஊரக வளர்ச்சித்துறையை சார்ந்த சின்னசாமி ஆகியோர் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், குயவன்குடி மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் கழுகூரணி கிராமங்களில் பாதிப்படைந்துள்ள நெற் பயிர்களையும் பார்வையிட்டனர்.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ஆலங்குளம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் தாளியரேந்தல் கிராமங்களில் பாதிப்படைந்துள்ள மிளகாய் பயிர்களையும், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருங்குடி மற்றும் திருவாடானை ஊராட்சி ஒன்றியம் கற்காத்தகுடி கிராமங்களில் பாதிப்படைந்துள்ள நெற் பயிர்களையும் ஆய்வு செய்து, பயிர் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகந்நாதன், கலெக்டர் (பொறுப்பு) மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சேக்அப்துல்லா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி உள்பட வேளாண் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story