உடுமலை பகுதியில் ஊடுபயிர் மட்டுமல்லாமல் தனிப்பயிராக பாக்கு சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்
உடுமலை பகுதியில் ஊடுபயிர் மட்டுமல்லாமல் தனிப்பயிராக பாக்கு சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
போடிப்பட்டி:-
உடுமலை பகுதியில் ஊடுபயிர் மட்டுமல்லாமல் தனிப்பயிராக பாக்கு சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தனிப்பயிர்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. அத்துடன் தென்னையில் ஊடுபயிராக பாக்கு, வாழை, கோகோ, மிளகு, ஜாதிக்காய், தானியங்கள் மற்றும் காய்கறிகளையும் பயிரிட்டு கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார்கள்.ஆனால் பாக்கு சாகுபடிக்கு தென்னையை விட 3 மடங்கு தண்ணீர் தேவைப்படும் என்பதால் தனிப் பயிராக சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனாலும் தென்னையை விட கூடுதல் வருமானம் தரக்கூடியது என்ற அடிப்படையில் ஒரு சில விவசாயிகள் பாக்கு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் உடுமலையையடுத்த மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளான நல்லார் காலனி, பாண்டியன் கரடு உள்ளிட்ட பகுதிகளில் தனிப்பயிராக பாக்கு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பாக்கு மரங்கள் 5 ஆண்டுகளில் தொடங்கி 50 ஆண்டுகள் வரை வருமானம் தரக்கூடியது. பாக்கு ரகங்களில் மங்களா, சுப மங்களா, மோஹித், தீர்த்தஹல்லி குட்டை என பல்வேறு ரகங்கள் உள்ளது. ஆனாலும் இந்த பகுதியில் அதிக அளவில் மோஹித் ரகமே பயிரிடப்படுகிறது. நடவுக்குத் தேவையான நாற்றுகளை கல்லார் பழப் பண்ணையிலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.ஆனாலும் அனுபவத்தின் அடிப்படையில் தரமான நாற்றுக்களை நாமாகவே உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
நாற்று உற்பத்தி
நன்கு முற்றிய தாய் பாக்கு மரங்களிலிருந்து தரமான பழங்களை சேகரிக்கிறோம். அதனை நாற்றங்காலில் பாதியளவு மண்ணில் புதைந்திருக்குமாறும், விதைக்காம்புகள் மேல் நோக்கி இருக்குமாறும் செங்குத்தாக நட்டு வைக்கிறோம். பின்னர் அதன்மீது நேரடியாக வெயில் படாமல் தென்னை ஓலைகளால் மூடி தினசரி தண்ணீர் தெளித்து வருகிறோம். சுமார் 2 மாதங்களில் நட்டு வைத்த பாக்கு விதைகளில் 90 சதவீதம் முளை விட்டிருக்கும். காகத்தின் மூக்கு போல முளை விட்டிருக்கும் இந்த பருவத்தை காக்கா மூக்குப்பருவம் என்று சொல்வார்கள்.
இந்த பருவத்தில் நாற்றங்காலிலிருந்து பிடுங்கி நேரடியாக வயலில் நடவு செய்யலாம். ஆனால் நாற்றுகள் மீது நேரடியாக சூரிய ஒளி படும்போது இலைகளில் சூரியக்கருகல் நோய் தாக்கக்கூடும்.எனவே காக்கா மூக்குப் பருவத்தில் நாற்றுக்களைப் பிடுங்கி வளமான மண் நிரம்பிய பாலிதீன் பைகளில் இட்டு நிழலான பகுதியில் வைத்து ஒரு ஆண்டு முதல் 1½ ஆண்டுகள் வரை பராமரித்து அதன்பிறகு வயலில் நடவு செய்வது மிகச்சிறந்த முறையாக இருக்கும்.
பாக்கு மரங்களுக்கு அவ்வப்போது வேப்பம் புண்ணாக்கு இட்டு வந்தால் பூச்சிகள் அதிக அளவில் தாக்குவதில்லை. அதையும் தாண்டி குருத்துப் பூச்சிகள் தாக்குதல் தென்பட்டால் புகையிலைக்கரைசலைத் தெளித்து அவற்றைக் கட்டுப்படுத்துகிறோம். இதுதவிர இலைப்புள்ளி நோய், அடித்தண்டு அழுகல், காய் அழுகல், நூற்புழு, சிலந்திப்பூச்சி என பல பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை தோட்டக்கலைத் துறையினரின் ஆலோசனை அல்லது அனுபவ விவசாயிகளின் ஆலோசனை பெற்று தீர்வு காண்கிறோம். 5 வருடங்களுக்கு மேலான பாக்கு மரங்களில் வருடத்துக்கு 5 முறைக்கு மேல் அறுவடை செய்ய முடியும்.சராசரியாக ஏக்கருக்கு 500 கிலோ வரை மகசூல் பெற முடியும்'என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story