விருத்தாசலம் ஆழத்து விநாயகர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


விருத்தாசலம் ஆழத்து விநாயகர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 6 Feb 2021 10:40 PM IST (Updated: 6 Feb 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் ஆழத்து விநாயகர் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருத்தாசலம்: 

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். மாசி மக பெருவிழாவுக்கு முன்னதாக ஆற்றங்கரையில் அமைந்துள்ள அய்யனார், செல்லியம்மன், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகர் ஆகிய சாமிகளுக்கு உற்சவம் நடைபெறும். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி தேர் முகூர்த்தமும், ஜனவரி 25-ந் தேதி அய்யனார் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. 26-ந்தேதி செல்லியம்மன் கோவிலுக்கு காப்பு கட்டப்பட்டு கடந்த 2-ந் தேதி பால்குடம் எடுத்தல், செடல் உற்சவம், தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

கொடியேற்றம்

இதைத்தொடர்ந்து நேற்று ஆழத்து விநாயகர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஆழத்து விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதனை தொடர்ந்து உற்சவர் கோவிலை வலம் வந்து கொடிமரத்தின் முன்பு எழுந்தருள சிவாச்சாரியர்கள் சிவ மந்திரங்களை ஓத கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தீர்த்தவாரி உற்சவம்

10 நாட்கள் நடைபெறும் ஆழத்து விநாயகர் உற்சவத்தில் வருகிற 14-ந் தேதி காலை 5 மணிக்கு தேர் திருவிழாவும், 15-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் 17-ந் தேதி அன்று விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வருகிற 22-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சியளித்தல் என்ற ஐதீக விழாவும், 25-ந் தேதி தேரோட்டமும், 26-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 27-ந்தேதி தெப்ப உற்சவமும், 28-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Next Story