கடலூாில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் -72 போ் கைது
கடலூா் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 72 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூா்:
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அதற்காக போராடும் விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும். விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6-ந் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடலூர் அண்ணா பாலம் அருகில் விவசாயிகள் போராட்ட ஒழுங்கிணைப்பு குழுவினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.தட்சணாமூர்த்தி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனர்.
சிதம்பரம்
இதேபோல் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று காலை சிதம்பரம் கஞ்சிதொட்டி அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர் தலைமை தாங்கினார். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தமிமுன் அன்சாரி, அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ராமச்சந்திரன், கற்பனைச் செல்வம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டு சாலையில் படுத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், மறியலில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
புவனகிரி
புவனகிரியில் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் பூபாலன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர செயலாளர் காசிலிங்கம் வரவேற்றார்.இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதேபோல் விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி என மாவட்டம் முழுவதும் விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story