காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
குடவாசலில் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடவாசல்,
காவிரி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் குடவாசல் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு காவிரி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு உயர்மட்டக்குழு உறுப்பினர் குடவாசல் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குருசாமி, ஒன்றிய தலைவர்நாகராஜன், ஒன்றிய செயலாளர் மோகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரத போராட்டத்தில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் அசோகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டா பகுதியில் விவசாயமே பிரதானமாக உள்ளது. தற்போது ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் அல்லல்பட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் வெளிமாநில நெல்லை இங்குள்ள இடைத்தரகர்கள் மூலம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் இங்குள்ள விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியவில்லை. மேலும் வெளிமாநில நெல்லை கொள்முதல் செய்வதால் மழை வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு போதிய பயிர்க்காப்பீடு தொகை கிடைக்க முடியாத நிலை ஏற்படும்.
தற்சமயம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும், 40 கிலோ மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல் செய்வதை அரசு உடனடி நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும்.
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்த்து உடனடியாக 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உண்ணாவிரதத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் மதுசூதனன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story