ஆயுர்வேத அறுவை சிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் விழிப்புணர்வு வாகன ஊர்வலம்
ஆயுர்வேத அறுவை சிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் இருந்து கரூர் வரை டாக்டர்கள் விழிப்புணர்வு வாகன ஊர்வலம் சென்றனர்.
ஈரோடு
ஆயுர்வேத அறுவை சிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் இருந்து கரூர் வரை டாக்டர்கள் விழிப்புணர்வு வாகன ஊர்வலம் சென்றனர்.
விழிப்புணர்வு ஊர்வலம்
ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பை திரும்ப பெறக்கோரி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கடந்த 1-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. அதன்படி இந்த போராட்டம் நேற்று 6-வது நாளாக தொடர்ந்தது. இந்த போராட்டத்துக்கு கிளை தலைவர் பிரசாத் தலைமை தாங்கினார்.
மேலும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன ஊர்வலமும் நேற்று நடந்தது. இந்த ஊர்வலத்தை இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் சி.என்.ராஜா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் தொடங்கிய ஊர்வலம் ஈ.வி.என். ரோடு, காளைமாட்டு சிலை, கொல்லம்பாளையம், சோலார், கொடுமுடி, சிவகிரி வழியாக சென்று கரூர் மாவட்டத்தில் நிறைவடைந்தது.
உயிருக்கு ஆபத்து
முன்னதாக இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் டாக்டர் சரவணன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
அலோபதி மருத்துவம் ஆதாரப்பூர்வமானது. இந்த மருத்துவ பயிற்சி பெற, 6 முதல், 10 ஆண்டுகள் மருத்துவ கல்லுாரியில் படித்து, கை தேர்ந்து வந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்குகின்றனர். பிற மருத்துவ முறை தவறு என கூறவில்லை. யார், யார் எந்தெந்த மருத்துவத்தை படித்துள்ளோமோ, அந்த மருத்துவத்தில் சிகிச்சை வழங்குவது சிறந்தது.
ஆயுர்வேத மருத்துவம் படித்தவர்கள், அலோபதி முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது அறிவுப்பூர்வமானது அல்ல. மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மக்களிடம் எடுத்துரைக்கவே தொடர் உண்ணாவிரத போராட்டமும், விழிப்புணர்வு வாகன ஊர்வலமும் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் துணை தலைவர் விஜயகுமார், பொருளாளர் சுதாகர், செயலாளர் செந்தில்வேல், சுகுமார், அபுல்ஹசன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story