கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு -வீட்டுக்கடன் செலுத்த முடியாததால் தீக்குளிக்க முயன்றதாக தகவல்
வீட்டுக்கடன் திரும்ப செலுத்த முடியாததால் தீக்குளிப்பதற்காக ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
வீட்டுக்கடன் திரும்ப செலுத்த முடியாததால் தீக்குளிப்பதற்காக ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்எண்ணெய் கேனுடன் பெண்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வேதக்காரன் குட்டை பகுதியை சேர்ந்தவர் தவசி. இவருடைய மனைவி சின்ன கற்தாயம்மாள் (வயது 60). நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இவர் ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார். கையில் ஒரு கேனுடன் வேகமாக கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், கார்த்தி, சிவபாலன், சிவக்குமார் ஆகியோர் தடுத்து விசாரித்தனர். அவரது கையில் இருந்த கேனில் மண்எண்ணெய் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது சின்ன கற்தாயம்மாளை அவரது மகன் சுகுமார் (39) என்பவர் அழைத்து வந்தது தெரியவந்தது.
அவரிடம் விசாரித்தபோது, வங்கி கடன் வட்டி அதிகம் கேட்பதால் செலுத்த முடியாமல் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து, மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல 2 பேரும் முயன்றனர். உடனடியாக போலீசார் மண்எண்ணெய் கேனை பிடுங்கி அப்புறப்படுத்தி, சின்ன கற்தாயம்மாள், சுகுமார் ஆகியோரை தடுத்தனர். சின்ன கற்தாயம்மாள் தரையில் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழுதார்.
வீட்டுக்கடன்
இதுபற்றிய தகவல் அறிந்து சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் 2 பேரும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பின்னர் போலீசார் விசாரணை செய்தபோது தெரியவந்த விவரங்கள் வருமாறு:-
கடந்த 2015-ம் ஆண்டு சின்ன கற்தாயம்மாள் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.5 லட்சம் வீட்டுக்கடன் பெற்று உள்ளார். அதற்கான தவணையை செலுத்தியும் வந்தனர். 2019-ம் ஆண்டு முதல் தவணை தொகையை செலுத்த முடியவில்லை. எனவே கடனுக்கு பதிலாக சம்பந்தப்பட்டவர்கள் கடனுக்கு ஈடாக வைத்த சொத்தினை பறிமுதல் செய்ய, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. நிதி நிறுவனம் சார்பில் சொத்துகளை பறிமுதல் செய்ய அனுமதி பெற்ற தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் முயற்சி செய்தனர். அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் இதற்கான அனுமதியை பெற்று பறிமுதல் நடவடிக்கை குறித்து சின்ன கற்தாயம்மாளுக்கு தபால் அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து சுகுமார் அவரது தாயாரை உடன் அழைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிப்பு போராட்டம் நடத்த முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்களின் விவரங்களை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story