அம்மாபேட்டை அருகே குறிச்சி மலைப்பகுதியில் மரம் வெட்டிய 3 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதம்- வனத்துறையினர் நடவடிக்கை


அம்மாபேட்டை அருகே குறிச்சி மலைப்பகுதியில் மரம் வெட்டிய 3 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதம்- வனத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Feb 2021 4:01 AM IST (Updated: 7 Feb 2021 4:01 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே குறிச்சி மலைப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மரம் வெட்டிய 3 பேருக்கு மொத்தம் ரூ.1½ லட்சத்தை வனத்துறையினர் அபராதமாக விதித்தனர்.

அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே குறிச்சி மலைப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மரம் வெட்டிய 3 பேருக்கு மொத்தம் ரூ.1½ லட்சத்தை வனத்துறையினர் அபராதமாக விதித்தனர்.
மரங்கள் வெட்டப்பட்டது
அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி மலைப்பகுதி 500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் சமூக நல காடுகள் வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிச்சி மலையின் ஒரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் மரம் வெட்டி கடத்தப்படுவதாக சென்னம்பட்டி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து வனச்சரகர் செங்கோட்டையன் தலைமையிலான வனக்குழுவினர் அங்கு சென்றனர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் ஒரு கும்பல் மண் அள்ளி கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். மேலும் 3 பொக்லைன் எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வனத்துறை பராமரிப்பில் இருந்த 122 மரங்கள் வெட்டப்பட்டது தெரியவந்தது.
3 பேருக்கு அபராதம்
விசாரணையில் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சி, நத்தமேட்டைச் சேர்ந்த மாதையன் மகன் குழந்தை கவுண்டர் (வயது35), தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சீரியனஹல்லி, ஆத்துக்கொட்டாயை சேர்ந்த ராஜு மகன் சந்துரு (22), காடப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாதுரை மகன் பிரபு (22) ஆகியோர் மரங்களை வெட்டி கடத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் விஷ்மஜூ விஸ்வநாதன் உத்தரவின்பேரில் 3 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1லட்சத்து 50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
மேலும், ராட்சத எந்திரங்கள் கொண்டு மண் மற்றும் கற்கள் தோண்டப்பட்டு லாரி மற்றும் டிராக்டர்களில் கடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கனிம வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Next Story