கரூர் அண்ணாசிலையை சுற்றி அ.தி.மு.க.-தி.மு.க.வினர் கொடி வைத்ததால் பரபரப்பு


கரூர் அண்ணாசிலையை சுற்றி அ.தி.மு.க.-தி.மு.க.வினர் கொடி வைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Feb 2021 4:12 AM IST (Updated: 7 Feb 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அண்ணாசிலையை சுற்றி அ.தி.மு.க., தி.மு.க.வினர் கொடி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கரூர் ,

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிகிறார். இதனையொட்டி தி.மு.க.வினர் நகரின் பல்வேறு இடங்களில் தி.மு.க. கொடி வைத்துள்ளனர். 

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் வடமஞ்சு விரட்டு இன்று நடைபெறுகிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினரும் கொடி வைத்துள்ளனர். இந்நிலையில் கரூர் அண்ணாசிலை ரவுண்டானாவை சுற்றியும், அண்ணாசிலையை சுற்றியும் இருகட்சியினரும் தங்களது கொடிகளை வைத்துள்ளனர். 

சாலை மறியல் 

இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த சிலர் அண்ணாசிலை தி.மு.க.வால் வைக்கப்பட்டது எனக்கூறி அண்ணாசிலையை சுற்றியிருந்த அ.தி.மு.க. கொடியை அகற்றினர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த ஏராளமான அ.தி.மு.க.வினர் மீண்டும் அதே இடத்தில் அ.தி.மு.க. கொடியை வைத்தனர். இதனால் அங்கு வந்த ஏராளமான தி.மு.க.வினர், அ.தி.மு.க.வினர் கொடியை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது.

பரபரப்பு 

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயகுமார் தலைமையிலான போலீசார் இருகட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இதில் சமரசம் அடைந்த இருகட்சியினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 20 நிமிடம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story