தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு துள்ளிக்குதித்த காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்; மாடுகள் முட்டியதில் 17 பேர் காயம்


தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு துள்ளிக்குதித்த காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்; மாடுகள் முட்டியதில் 17 பேர் காயம்
x
தினத்தந்தி 7 Feb 2021 4:39 AM IST (Updated: 7 Feb 2021 4:39 AM IST)
t-max-icont-min-icon

தம்மம்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அப்போது, களத்தில் துள்ளிக்குதித்த காளைகளுடன், காளையர்கள் மல்லுக்கட்டினர். மாடுகள் முட்டியதில் 17 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தினவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வந்தனர். இந்தநிலையில், தம்மம்பட்டி-துறையூர் சாலையில் நேற்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது.

இதில், சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அப்போது, காளைகளுக்கு நோய் ஏதும் உள்ளதா? என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். 

அதேபோல், ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 287 பேருக்கு தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வேலுமணி தலைமையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உறுதிமொழி
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படாத வகையில் மைதானத்தில் தென்னைநார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தன. மேலும், பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் காளைகள் சென்றுவிடாமல் இருக்க 2 அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதையடுத்து நேற்று காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கி கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் அனைவரும் கலெக்டர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

அதனை தொடர்ந்து வாடி வாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது, சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். ஆனால் காளைகள் மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் திமிறிக்கொண்டு ஓடின. சில இளைஞர்கள் மட்டும் காளைகளின் திமிலை பிடித்து அடக்கியதை காணமுடிந்தது. களத்தில் துள்ளி குதித்து வந்த காளைகளை காளையர்கள் பிடிக்க மல்லுக்கட்டினர். அப்போது சில காளைகள், தன்னை அடக்க வந்த வீரர்களை கொம்புகளால் தூக்கி வீசின.

பரிசுகள்
ஒவ்வொரு காளையும் களத்துக்கு வரும் முன் ஒலிபெருக்கி மூலம் இந்த காளையை அடக்கினால் தங்கம், வெள்ளிக்காசு மற்றும் ரொக்கம் வழங்கப்படும் என்று விழாக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் பரிசுகளை பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள் காளைகளை பிடிக்க முயன்றனர். ஆனால் யாருக்கும் பிடிகொடுக்காமல் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 17 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆத்தூர் மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 அதேசமயம், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது. அதாவது, சைக்கிள், மின்விசிறி, சில்வர் பாத்திரம், பீரோ, டைனிங் டேபிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டையொட்டி தம்மம்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story