சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் கோஷ்டி மோதல் மோதல்; போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநங்கைகள்
சேலம் மாநகரில் 5 ரோடு ஸ்டேட் பேங்க் காலனி, ரெட்டியூர், குகை பஞ்சதாங்கி ஏரி உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் மாநகரில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணம் வசூல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனிடையே சமீபகாலமாக பஞ்சதாங்கி ஏரி, ஸ்டேட் பேங்க் காலனியில் வசிக்கும் திருநங்கைகள் இடையே பணம் வசூலிப்பது தொடர்பாக கோஷ்டி மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் நேற்று முன்தினம் திருநங்கைகளின் ஒரு தரப்பினர் பணம் வசூல் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த மற்றொரு தரப்பு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில், சுதா (வயது 50), தனுஷ்கா (20) உள்பட 3 பேர் காயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
பயங்கர மோதல்
இந்தநிலையில், சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது தரப்பை சேர்ந்த திருநங்கைகளை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கிருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரிடம் தெரிவித்தனர்.
அந்த சமயத்தில் மற்றொரு தரப்பை சேர்ந்த திருநங்கைகளும் அங்கு வந்தனர். அப்போது, கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை விலக்கி விட முயன்றனர். ஆனால் அங்கிருந்த ஒரு திருநங்கையை சக திருநங்கைகள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
போலீசார் தடியடி
இது ஒருபுறம் இருக்க, ஒரு கட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றது. அப்போது, போலீசார் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட திருநங்கைகள் மீது லேசான தடியடி நடத்தி இரு தரப்பினரையும் கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து திருநங்கைகளிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
அதில், கடைகளில் வசூல் செய்யும் பணத்தில் இருந்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் கமிஷன் கேட்பதும், மேலும் கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்ய கூறுவதும் தெரியவந்தது. ஆனால் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
விசாரணை
இதனை தொடர்ந்து கோஷ்டி மோதலில் காயமடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் திருநங்கைகளை பார்ப்பதற்காக ஏராளமான திருநங்கைகள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்து செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். திருநங்கைகளின் கோஷ்டி மோதல் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story