டீசல் விலையை குறைக்கக்கோரி ரிக் வண்டிகள் வேலைநிறுத்தம்
டீசல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் ரிக்வண்டி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரிக் வண்டிகள்
நாமக்கல் மாவட்டத்தில் 7 ஆயிரம் ரிக் வண்டிகள் உள்ளன. இவை பல்வேறு மாவட்டம் மற்றும் வடமாநிலங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வண்டியிலும் மேலாளர், டிரைவர், தொழிலாளர்கள் என 15 பேர் பணியாற்றுகின்றனர்.
ஒரு இடத்தில் போர் போடுவதற்கு ஒரு அடிக்கு ரூ.75 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் போர் போட்டு முடிக்கும்போது, வண்டி உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் வரை கையில் இருந்து செலவு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
வேலைநிறுத்தம்
இந்த நிலையில் நாமக்கல் தாலுகா ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று டீசல், ஆயில் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், அவற்றின் விலையை குறைக்க வலியுறுத்தியும், போர் போடுவதற்கான கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் கடந்த 3 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ரிக் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:-
கடந்த ஓராண்டில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.13 வரை உயர்ந்து உள்ளது. இதேபோல் ஆயில் மற்றும் மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே போர் போடுவதற்கான கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்ய வலியுறுத்தி வருகிறோம். இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரிக் உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story