வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2021 6:44 AM IST (Updated: 7 Feb 2021 6:52 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, அச்சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் நீலகண்டன், பொருளாளர் மணி ஆகியோர் பேசினர்.

கை தட்டி, கும்பிட்டு...

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயமாக்கக்கூடாது. விவசாயிகளுக்கு இலவச மின்சார சலுகை தொடர வேண்டும். தற்போது மின்வினியோகம் செய்யப்பட்டு வரும் நேரம் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், முன்பு போல் மின்வினியோகம் செய்ய வேண்டும். தொடர் மழையினால் நெல், மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், மரவள்ளி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும்.
பிரதமரின் திருத்திய வேளாண் காப்பீடு திட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது போல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு கை தட்டி, கும்பிடு போட்டனர். விவசாயிகளின் இந்த நூதன ஆர்ப்பாட்டத்தை பஸ் பயணிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

Next Story