சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Feb 2021 9:49 AM IST (Updated: 7 Feb 2021 9:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 320 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அந்த விமானம் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக கவுகாத்திக்கு செல்ல இருந்தது. இதற்கிடையில் துபாய் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு அந்த விமானத்தில் ஏறி சோதனை செய்தனர்.

அப்போது ஒரு இருக்கையின் அடியில் 10 தங்க கட்டிகள் இருந்தன. ரூ.57 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 160 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

இடுப்பு பெல்ட்

பின்னர் அந்த விமானம் கவுகாத்திக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது காஞ்சீபுரத்தை சேர்ந்த மொகபத் கான் (வயது 53) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் அவரது இடுப்பில் பெல்ட் கட்டி இருந்தாா். சந்தேகத்தின்பேரில். அதை பிரித்து பார்த்தபோது 10 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அவரிடம் இருந்து ரூ.57 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 160 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரூ.1 கோடி மதிப்பு

மேலும் விசாரணையில் காஞ்சீபுரத்தை சேர்ந்த மொகபத் கான், சென்னையில் இருந்து காலையில் கவுகாத்திக்கு விமானத்தில் சென்றுவிட்டு அங்கிருந்து மீண்டும் அதே விமானத்தில் சென்னை திரும்பி வந்தது தெரியவந்தது.

விமானத்தின் 2 இருக்கையின் அடியில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தன்னிடம் கூறப்பட்டது. ஆனால் ஒரு இருக்கையின் அடியில் இருந்து தான் தங்க கட்டிகள் எடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார். துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தவர்கள், 2 இருக்கையின் அடியில் அதை மறைத்து வைத்து உள்ளனர். அதில் ஒரு இருக்கையின் அடியில் இருந்த தங்கத்தை கவுகாத்திக்கு செல்லும் முன்பே அதிகாரிகள் கைப்பற்றி விட்டனர். மற்றொரு இருக்கையின் அடியில் இருந்ததைதான் மொகபத்கான் எடுத்து வந்தது தெரிந்தது.

விமான நிலையத்தில் மொத்தம் ரூ.1 கோடியே 14 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 320 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக மொகபத் கானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story