கும்மிடிப்பூண்டியில் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி நூதன முறையில் தொழிலாளியிடம் ரூ.93 ஆயிரம் திருட்டு
கும்மிடிப்பூண்டியில் கூலித்தொழிலாளியின் ஏ.டி.எம். கார்ட்டை பயன்படுத்தி நூதன முறையில் ரூ.93 ஆயிரத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் சாந்தலிங்கம் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் 28-ந்தேதி கும்மிடிப்பூண்டி பஜாரில் ரெட்டம்பேடு சாலை சந்திப்பின் எதிரே உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ.5 ஆயிரம் எடுக்க முயன்றார். பரிவர்த்தனைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் வந்ததால் அவரால் பணத்தை எடுக்க முடியாமல் தவித்தார்.
இந்த நிலையில், ஏ.டி.எம். மையம் அருகே கணவன் மனைவி போல டிப்-டாப்பாக நின்றுகொண்டிருந்த இளம் வயது தம்பதியிடம் தனக்கு உதவிடுமாறு சாந்தலிங்கம் கேட்டார்.
ரூ.93 ஆயிரம் திருட்டு
இதனையடுத்து அவரிடம் ரகசிய குறியீடு எண்ணை பெற்று ரூ.5 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தார். தான் வைத்திருந்த அதே போன்ற வங்கியின் கணக்கு உள்ள மற்றொரு ஏ.டி.எம். கார்டை சாந்தலிங்கத்திடம் கொடுத்துள்ளார்.
ஏ.டி.எம். கார்ட்டின் நிறம் ஒரே மாதிரியாக இருந்ததால் அதனை தனது கார்டு என்று நினைத்து வாங்கி கொண்டு சாந்தகுமார் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில், கடந்த 4-ந்தேதி, மீண்டும் தனது ஏ.டி.எம். கார்ட்டில் இருந்து பணம் எடுக்க கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சாந்தலிங்கம் சென்றார். அவர் வைத்திருந்த ஏ.டி.எம். கார்ட்டு வேலை செய்யவில்லை. இதனையடுத்து தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று சாந்தலிங்கம் விவரம் கேட்டபோது அவரிடம் இருந்தது அவரது ஏ.டி.எம். கார்டு இல்லை என்பதும், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.93 ஆயிரம் கடந்த சில நாட்களாக பல்வேறு ஏ.டி.எம். மையங்களில் இருந்து திருடப்பட்டிருப்பதும், தற்போது கணக்கில் வெறும் ரூ.83 மட்டுமே இருப்பதும் தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
போலீசில் புகார்
இதுகுறித்து சாந்தலிங்கம் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து குறிப்பிட்ட வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 28-ந்தேதி சாந்தலிங்கத்திற்கு பணம் எடுக்க உதவுவது போல நடித்து அவரது ஏ.டி.எம்.கார்ட்டை அபேஸ் செய்த மர்ம நபர் குறித்தும், அவர் அங்கு கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் எண்ணையும் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி மூலம் போலீசார் கண்டறிந்தனர். இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தவிர சாந்தலிங்கத்தின் ஏ.டி.எம். கார்ட்டை பயன்படுத்தி எந்த எந்த இடங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் எப்போது பணம் எடுக்கப்பட்டது? எடுத்த நபர்களின் அடையாள விவரங்களையும் பல்வேறு ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
நூதன முறையில் மோசடி செய்த அந்த டிப்-டாப் நபர் கூலித்தொழிலாளி சாந்தலிங்கத்திடம் கொடுத்தது அவரது ஏ.டி.எம்.கார்டு தானா? அல்லது வேறு எங்காவது திருடப்பட்ட மற்றொரு ஏ.டி.எம். கார்டா? என்பது தெரியவில்லை. டிப்-டாப் நபருடன் வந்த பெண் யார்? அவருக்கும் அந்த துணிகர மோசடியில் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் தீவிரமாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story