நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவி கிணற்றில் மூழ்கி பலி
வந்தவாசி அருகே நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவி கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாள்.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மேகநாதன் என்ற மகனும், தமிழேந்தி (வயது 10), கவிமணி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
அதில் தமிழேந்தி வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். அவள், நீச்சல் பழக தனது தோழிகளுடன் அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்றாள். அங்கு அவள், தனது உடலில் சேலையைக் கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கி நீச்சல் பழகினாள்.
சக தோழிகள் அதிர்ச்சி
அப்போது சேலை உடலில் சுற்றிக்கொண்டதால் ஈரத்தில் உடலோடு ஒட்டிக்கொண்டது. இதனால் அவளால் கை, கால்களை அசைக்க முடியவில்லை, எனக் கூறப்படுகிறது. இதனால் அவள் நீரில் மூழ்கினாள். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சகதோழிகள் சத்தம்போட்டுக் கூச்சலிட்டனர்.
அக்கம் பக்கத்தில் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் ஓடி வந்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை கேள்விப்பட்ட கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து, கிணற்றில் இறங்கி சிறுமி தமிழேந்தியை தேடினர். ஆனால் அவளின் உடல் கிணற்றுக்கு அடியில் சென்று விட்டது.
பிணமாக மீட்பு
கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் பெரணமல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி சிறுமியை பிணமாக மீட்டனர். இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story