ஈரோட்டில் 6-வது நாளாக போராட்டம்: நெற்றியில் நாமம் போட்டு அரசு ஊழியர்கள் சாலை மறியல்- 25 பேர் கைது
ஈரோட்டில் 6-வது நாளாக போராட்டம் நடத்தி வந்த அரசு ஊழியர்கள் நெற்றியில் நாமம் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு
ஈரோட்டில் 6-வது நாளாக போராட்டம் நடத்தி வந்த அரசு ஊழியர்கள் நெற்றியில் நாமம் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்பட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3½ லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 6-வது நாளாக நேற்று சங்க மாவட்ட இணைச்செயலாளர் பழனிசாமி தலைமையில் அரசு ஊழியர்கள் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் திரண்டனர்.
அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் நெற்றியில் நாமம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
25 பேர் கைது
இதில் மாவட்ட செயலாளர் விஜயமனோகரன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளா் ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகம் முன்பு செல்லும் கச்சேரி வீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அரசு ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர்.
அங்கு நடுரோட்டில் அமர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது ஒருசிலர் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதில் 4 பெண்கள் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டு, ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story