9, 11-ம் வகுப்புகள் இன்று திறப்பு: 403 பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
9, 11-ம் வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளதால், 403 பள்ளிக்கூடங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்தது.
ஈரோடு
9, 11-ம் வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளதால், 403 பள்ளிக்கூடங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்தது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. நடப்பு ஆண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால், பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன.
இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், பள்ளிக்கூடங்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி முதல்கட்டமாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து 9-ம் வகுப்பு, பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி பள்ளிக்கூடங்களில் முன்னேற்பாடுகள் நேற்று தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
கிருமி நாசினி
பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மேஜையின் நடுவில் அடையாளமிடுதல், கிருமி நாசினி கொண்டு வகுப்பறைகளை சுத்தம் செய்தல், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள சானிடைசர்களை தயாராக வைத்தல் போன்ற பணிகள் நடந்தன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார், சி.பி.எஸ்.இ. என மொத்தம் 403 பள்ளிக்கூடங்களில் 9-ம் வகுப்பு, பிளஸ்-1 வகுப்பு தொடங்கப்பட உள்ளது. 9-ம் வகுப்பில் 14 ஆயிரத்து 631 மாணவர்களும், 13 ஆயிரத்து 762 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 393 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பிளஸ்-1 வகுப்பில் 11 ஆயிரத்து 957 மாணவர்களும், 12 ஆயிரத்து 916 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 873 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
ஒரு வகுப்பில் 25 மாணவ-மாணவிகள் அமருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாணவ-மாணவிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். பள்ளிக்கூடத்துக்குள் வரும்போது உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story