ஓசூர் அருகே துணிகரம்: முன்னாள் ராணுவ வீரர் மனைவியை கட்டிப்போட்டு 24 பவுன் நகை கொள்ளை
ஓசூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு முகமூடி கொள்ளையர்கள் 24 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில், கக்கனூர் பகுதியை சேர்ந்தவர் அகில்குமார் (வயது 67). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி பிரீத்தி (60). நேற்று முன்தினம் இரவு வீட்டில் கணவன்-மனைவி 2 பேரும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலை 3 முகமூடி கொள்ளையர்கள் அகில்குமாரின் வீட்டின் மாடி ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.
கொள்ளையர்கள் 3 பேரும் அகில்குமார் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக தாக்கினர். பின்னர் கொள்ளையர்கள், கணவன்-மனைவி 2 பேரையும் கட்டிப்போட்டு ரூ.1 லட்சம் கொடுக்குமாறு இந்தியில் கேட்டுள்ளனர். இதையடுத்து அகில்குமார் ரூ.12 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட கொள்ளையர்கள் பீரோவை திறந்து 24 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
வலைவீச்சு
பின்னர், கணவன்-மனைவி 2 பேரும் சத்தம் போட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர். ஓடி வந்து 2 பேரையும் மீட்டு, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அகில்குமார் பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டன. கிருஷ்ணகிரியில் இருந்து மோப்ப நாய் பைரவி வரவழைக்கப்பட்டு அங்கும், இங்கும் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் கர்நாடகத்தின் பல்வேறு இடங்களுக்கு ெகாள்ளையர்களை பிடிக்க விரைந்துள்ளனர். இந்த துணிகர சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story