தஞ்சை ரெயில் நிலையம் முன்பு 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி 24 மணிநேரமும் பட்டொளி வீசி பறக்கும்
தஞ்சை ரெயில் நிலையம் முன்பு 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடி 24 மணிநேரமும் பட்டொளி வீசி பறக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் முன்பு 100 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டு தேசியக்கொடியை ஏற்ற மத்தியஅரசு ஆணையிட்டுள்ளது. இந்த தேசியக்கொடி 24 மணிநேரமும் பறந்து கொண்டிருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி தஞ்சை ரெயில் நிலையம் முன்பு 100 அடி உயர கம்பம் அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு பணி முடிவடைந்தது. அதன்பின்பு பெரிய அளவிலான தேசியக்கொடியை ஏற்றி சோதனை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பட்டொளி வீசியது
குடியரசு தினத்தன்று இந்த கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது கொடி ஏற்றப்படவில்லை. நேற்றுகாலை தஞ்சை ரெயில் நிலையம் முன்பு 100 அடி உயரமுள்ள கம்பத்தில் 30 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட தேசியக்கொடி கயிற்றில் கட்டப்பட்டது.
பின்னர் ரெயில்வே உதவி கோட்ட பொறியாளர் ஷியாம் நாகர், பொத்தானை அழுத்தியதை தொடர்ந்து மின்சார எந்திரம் மூலம் தேசியக்கொடி மெல்ல மேலே ஏறியது. இந்த கொடி உச்சிக்கு செல்ல 8 நிமிடங்கள் ஆனது. கம்பத்தின் உச்சிக்கு சென்றவுடன் பெரிய அளவிலான தேசியக்கொடி பட்டொளி வீசி பறந்தது.
பொதுமக்களுக்கு இனிப்பு
இதையடுத்து தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தஞ்சை மாநகரில் தொலைவில் இருந்து பார்த்தாலும் தெரியும் இந்த கொடி 24 மணிநேரமும் பறந்து கொண்டிருக்கும். இரவு நேரத்தில் வண்ண விளக்குகள் ஒளிரவிடப்படும் என ரெயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர். இந்தநிகழ்ச்சியில் ரெயில் நிலைய மேலாளர் சம்பத்குமார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story