சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா வெற்றி பெற்றால், தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும்; மத்திய இணை மந்திரி வி.கே.சிங் பேட்டி


சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா வெற்றி பெற்றால், தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும்; மத்திய இணை மந்திரி வி.கே.சிங் பேட்டி
x
தினத்தந்தி 8 Feb 2021 6:23 AM IST (Updated: 8 Feb 2021 6:23 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்று மத்திய இணை மந்திரி வி.கே.சிங் கூறினார்.

மக்களுக்கான பட்ஜெட்
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரியும், முன்னாள் ராணுவத்தளபதியுமான வி.கே.சிங் நிருபர்களிடம் கூறியதாவது-

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக சுகாதாரம், உள் கட்டமைப்பு, ஏழைகளுக்கான பட்ஜெட், மனித மூலதனத்தை அதிகபடுத்துவது, நவீன மயமாக்கல் ஆராய்ச்சிகளுக்கான பட்ஜெட்டாக இது அமைந்து உள்ளது. இந்த பட்ஜெட் 6 கட்டங்களாக பிரிக்கப்பட்டு மக்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் அனைத்து துறைகளுக்குமான நிதி குறிப்பிடத்தக்க வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் ஏழை, எளிய மக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் அதிகளவில் சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன. மேலும் இந்த பட்ஜெட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களிள் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியால் நன்மை

பாதுகாப்புத்துறைக்கு கடந்த ஆண்டை விட அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் நோக்கம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல் கொேரானாவிலிருந்து பாதுகாப்பது தான். கச்சத்தீவு தாரை வார்ப்பு விஷயம், முடிந்த போன கதை. அது இருந்த இடத்தில் தான் உள்ளது. அது நீண்ட கால பிரச்சினை. அது 2 நாடுகளுக்கு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி உள்ளது. இந்தியாவிற்கு நெருக்கமான நட்பு நாடு இலங்கை. மீனவர் விஷயத்தில் சில பிரச்சினைகள் உள்ளது.
ஆழ்கடலில் மீன் பிடிக்கும் வசதிகளை அரசு செய்து உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசுடன் அ.தி.மு.க.வின் உறவு நல்லமுறையில் உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் நிறைய கிடைக்கும்.

பொருளாதார தாக்குதல்

இந்தியா எல்லை வரைபடம் சரியாக வரையறை செய்யப்படவில்லை. நமது எல்லைக்குள் சீனா 10 முறை வந்தால், நாம் அவர்களின் எல்லைக்குள் 50 முறை ஊடுருவுவோம். இதை சீனாவிடம் தெளிவாக கூறியுள்ளோம். இதைப்பற்றி வெளியில் சொல்வதில்லை. தற்போது சீனா மீது பொருளாதார தாக்குதல் நடத்தி வருகிறோம். இதனால் சீனா நிலைகுலைந்து உள்ளது. திட்டமிட்டதைப்போல, உரிய நேரத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிச்சயம் வரும். தமிழகத்திற்கு ராகுல்காந்தி வருவதை நீங்கள் தான் பெரிதாக எடுத்துக்கொள்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மதுரை தல்லாகுளம் பகுதியில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க கூட்டத்தில் மத்திய இணை மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், மாநில துணைத்தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, மாநகர, மாவட்ட தலைவர்கள் சீனிவாசன், சுசீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story